
அதிகமான குடும்பங்களில் ஆண்கள் தொழிலுக்குச் சென்றுவிட, பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளை பராமரிப்பவர்களாகவும் வீட்டு வேலைகளை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
தொழிலுக்குச் சென்ற ஆண்களைவிட அதிகமாக வேலைப் பளு நிறைந்தவர்களாகதான் இந்த பெண்கள் காணப்படுவார்கள்.
வீட்டை சுத்தம் செய்தல்,பாத்திரங்கள் கழுவுதல், உடைகள் துவைத்தல், முற்றத்தை சுத்தம் செய்தல்,சமைத்தல்,பிள்ளைகளை பராமரித்தல் என வேலைகள் அவர்களுக்கு நீண்டுக்கொண்டே செல்கின்றன.
இந்த வேலைகளில் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தும் பெண்கள் சிலர், மாலை தனது கணவர்கள் வீடு திரும்பும் போது அவர்களை முறையாக கவனிக்கத் தவறுகின்றனர்.
களைத்துப்போய் வீடு வரும் கணவர்களுக்கு தேநீர் கொடுப்பது, சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுவது போன்றவை சில குடும்பங்களில் கிடையாது. சில வீடுகளில் கணவர்கள் வீட்டிற்கு திரும்பும்போது பெண்கள் குட்டி நித்திரையில் ஆழ்ந்துவிடவும் செய்கின்றார்கள்.
விரும்பிய உணவை சமைத்துக்கொடுக்க முடியாமல் போவது,உறவில் ஈடுபட விருப்பமின்மை போன்றவை அதிகமான வேலைப்பளுவை அவர்கள் தலையில் திணிப்பதனாலும் ஏற்படுகின்றது.
பெரும்பாலும் இதை ஆண்கள் புரிந்துக்கொள்ள தவறுகின்றனர்.சில நேரங்களில் அவர்களுடன் இந்தச் சிறு சிறு விடயங்களுக்காக சண்டைபிடிக்கவும் செய்கின்றனர்.
ஆண்கள் தங்கள் அன்பு நிறைந்த மனைவியர்களுடன் அழகிய இல்வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமானால் முதலில் அவர்களது வேலைப் பளுவை குறைக்க வேண்டும்.
வீட்டு வேலைகளில் மனைவியுடன் கணவரும் பங்கேற்றுக்கொள்ள வேண்டும்.பெண் செய்ய வேண்டியதை பெண்தான் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கை கணவர்கள் விட்டுவிட வேண்டும்.
கணவர் தங்களால் முடிந்த சிறுசிறு உதவிகளையாவது செய்துக்கொடுத்தால் மனைவி மிக மகிழ்ச்சியடைவார். உதாரணத்திற்கு மனைவியர் காலையில் எழும்பும் போது அவர்களுடன் நீங்களும் எழலாம். எழுந்து வீட்டை சுத்தம் செய்து கொடுக்கலாம். காய்கறிகள் நறுக்கிக்கொடுக்கலாம்.முற்றத்தை சுத்தம் செய்யலாம். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆயத்தப்படுத்தலாம். அவர்களுக்கு உணவுகளை பொதியிட்டுக்கொடுக்கலாம். குடும்பத்தினரின் ஆடைகளை துவைக்க மனைவிக்கு உதவலாம்.
இவ்வாறு சிறுசிறு விடயங்களை கணவர்கள் செய்து கொடுக்கும் போது மனைவியர்களது வேலைப்பளுவும் குறையும். கணவர்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்.
அன்பு அதிகரித்தால் கணவர் வெளியே செல்லும் போதும் வாசல்வரை வந்து
வழியனுப்பிவைத்துவிட்டு,கணவர் சென்றுமறையும் வரை அவர்களையே பார்த்து கைக்காட்டிக்கொண்டிருக்கும்,மாலையில் அவர்களின் வரவை எதிர்பார்த்து அன்புடன் வாசலில் காத்திருக்கும் மனைவியைப் பெறலாம்.
வீட்டு வேலைகள் பெண்களுக்கு மாத்திரமானவை எனவும் ஆண்கள் அதில் பங்கேற்பது கௌரவத்திற்கு இழுக்கு எனவும் சில ஆண்கள் கருதுகின்றனர். ஆனால் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழில்சார் நிபுணர்கள் பலர் தங்கள் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒத்துழைப்பவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களின் குடும்பவாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது.
எல்லா கணவர்களும் இதை முயன்று பார்க்கலாமே
அன்புடன்
கண்ணன்
No comments:
Post a Comment