ykannan: Aeroscraft விண்கப்பல்

Saturday, July 3, 2010

Aeroscraft விண்கப்பல்

மனித குல வரலாற்றிக் தொடக்கத்திலிருந்து, மனிதனின் அறிவியல் தேடல்களுக்கான முயற்சி என்றுமே முற்றுப்பெற்றதில்லை. தொடர்ச்சியான அறிவியற் தேடலின் மூலமாகவே மனிதகுலம் இன்றைய நவீன அறிவியல் உலகத்தை அடைந்துள்ளது. அந்த முற்றுப்பெறாத அறிவியற் தேடலின் கண்டுபிடிப்புக்களில் ஒன்றே Aeroscraft விண்கப்பல் ஆகும்.

மிகவிரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த Aeroscraft ஆனது, ஒரு கனரக விண்கப்பல் ஆகும். மின்சார இயந்திரத்தின் மூலம் இயங்கும் இந்தக் கனரக விண்கப்பல் இருநூற்றைம்பது வரையான பயணிகளையோ அல்லது 400 தொன் வரையான சரக்குகளையோ காவிச்செல்ல வல்லது. இது சாதாரண விண்கப்பல் (airship) ஒன்றைப்போன்று ஓடுபாதை இல்லாது மேலெழவோ அல்லது தரையிறங்கவோ வல்லது. சாதாரண விண்கப்பல் ஒன்றைப்போன்று இதன் விண்ணில் பறப்பதற்கான தூக்குவிசை ஹீலியம் வாயுவின் மூலம் உருவாக்கப்பட்டாலும், விமானம் போன்ற இதனது உடற்பகுதியின் வடிவமும் இதற்கான தூக்கு விசையை வழங்குகின்றது.

தேவையான மொத்தத் தூக்குவிசையின் அறுபது வீதமான பகுதி ஹீலியம் வாயுவினாலும் மீதி தூக்குவிசை இவ்வான் கப்பலின் உடற்பகுதி மற்றும் இறக்கையமைப்புக்கள் போன்றவற்றில் தாக்கும் காற்றியக்க விசையின் மூலமாகவும் வழங்கப்படுகின்றது.

1930 களின் பிற்பகுதியில் Hindenburg எனப்பட்ட வான்கப்பல் விபத்தைத் தொடர்ந்து, வான்கப்பல் மூலமான பயணிகள் போக்குவரத்து முடிவிற்கு வந்தது. அதன்பின்னர், இலகுரக வான்கப்பல்கள், விளம்பரப் பதாகைகள் பறக்கவிடல் மற்றும் தொலைக்காட்சிப் படப்பிடிப்பு போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், போக்குவரத்துப் பயன்பாடுகளில் வான்கப்பல்களை ஈடுபடுத்துவதில் தயக்கம் நிலவி வந்தது. பல்வேறு நிறுவனங்கள் பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமான வான்கப்பல்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி வந்த போதிலும், Worldwide Aeros நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுவரும் இந்த Aeroscraft எனப்படும் வான்கப்பலே பலரதும் கவனத்தை ஈர்த்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண வான்கப்பல் ஒன்று ஹீலியம் அல்லது ஐதரசன் வாயுவினால் நிரப்பப்படும் போது அது வளியில் மிதக்கின்றது. இவ்வாறு ஹீலியம் அல்லது ஐதரசன் வாயு நிரப்பப்பட்ட வான்கப்பல் வளியில் மிதப்பதன் aeroscraft-diagramஅடிப்படைத் தத்துவம் மிகவும் எளிதானது. அதாவது அடர்த்தி குறைந்த வளியினால் நிரப்பப்படும் வான்கப்பல், அடர்த்தி கூடிய வளியில் மிதக்கின்றது. அதேபோன்று, இந்த Aeroscraft வான்கப்பலுக்கான மிதப்பு விசையின் 60 வீதமான மிதப்பு விசை, வாக்கப்பலினுள் நிரப்பப்படும் 14 மில்லியன் சதுர அடி கனவளவுடைய ஹீலியம் வாயுவினால் வழங்கப்படுவதுடன், மீதி மிதப்பு விசையானது, அது முன்னோக்கி நகரும்போது அதன் முன் மற்றும் பின் புறங்களில் அமைந்துள்ள இறக்கைகளின் மேற்பரப்புக்களில் ஏற்படுத்தப்படும் காற்றியக்க விசையின் காரணமாக உருவாக்கப்படுகின்றது.

165 அடி உயரம், 244 அடி அகலம் மற்றும் 647 அடி நீளமுடைய இந்த Aeroscraft வான்கப்பல் 400 தொன் நிறையுடன் மணிக்கு 174 மைல் வேகத்தில் 6000 மைல்கள் தொலைவிற்குப் பறக்கவல்லது.

இந்த Aeroscraft வான்கப்பலானது நான்கு சுழலிக்காற்றாடி (turbofan) இயந்திரங்களின் உதவியுடன் நிலைக்குத்தாக மேலெழவோ அல்லது தரையிறங்கவோ வல்லது. நிலைக்குத்தாக மேலெழுந்து அதன் பறப்பு உயரமான 8000 அடி உயரத்தை அடைந்ததும், ஐதரசன் மின்கலங்களின் மூலம் இயக்கப்படும் மின்னியந்திரச் சுழலிகள் இயக்கப்பட்டு விண்கப்பல் முன்நோக்கி நகரும். இவ்வாஞ மின்னியந்திரங்களின் மூலம் இயக்கப்படுவதன் காரணமாக இவ்விண்கப்பல்கள் பாரியளவில் ஒலியெழுப்புவதில்லை.

இதன் முழுமையாக கட்டுப்பாட்டுத் தொகுதிகளுக்குமான கட்டளைகள் ஒளியிழை வடங்களினூடாகவே (optical cable) பரிமாறப்படுகின்றன. இவ்வாறு ஒளியிழை வடங்களின் மூலம் தகவற் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் பறப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதிகள் Fly-by-Light (FBL) என்றழைக்கப்படுகின்றன. மின்கம்பி வடங்களைப் பயன்படுத்தும்போது பறப்புக்கட்டுப்பாட்டுத் தொகுதியில் ஏற்படும் மின்காந்தப்புலக் குறுக்கீடு, அவடவாறான குறுக்கீடுகளைத் தவிர்ப்பதற்காக மின்கம்பி வடங்களுக்கு இடப்படும் மேலதிக காப்புறைகளினால் ஏற்படும் நிறை அதிகரிப்பு என்பவற்றைத் தவிர்ப்பதற்காகவே, இவ்வான் கப்பலின் பறப்புக்ட்டுப்பாட்டுத் தொகுதியில் ஒளியிழை வடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விண்கப்பலின் பறப்புக்கட்டுப்பாட்டுத் தொகுதியிலுள்ள அனைத்துச் செயற்பாடுகளும் தன்னியக்கமாகவே நடைபெறுகின்றன. இருப்பினும், விமானிகள் இருவரும், அவசர நிலைகளைக் கையாளுதல் மற்றும் கப்பலின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக, இத்தனினியக்கச் செயற்பாடுகளைக் கண்காணித்தவண்ணமிருப்பர்.

பெரும்பாலும் இவ்வருடம் (2010) பரிசோதனை ஓட்டத்திற்குத் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த விண்கப்பல் அதிக கொள்ளளவு காவுதிறனுடன் காணப்படுவதன் காரணமாக, இராணுவ மற்றும் பொதுப்பயன்பாட்டு வழங்கல் (supply) பணிகளுக்கு உகந்ததாகக் காணப்படுகின்றது. அதுதவிர அவசரகால மீட்புப்பணி மற்றும் தீயணைப்புப் பணி போன்றவற்றிற்கும் இதன் பயன்பாடு பெரிதும் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சாதாரண விமானங்களை விட 30 வீதம் குறைவான உற்பத்திச் செலவும் 50 வீதம் குறைவான பராமரிப்புச் செலவும் கொண்ட இந்த விண்கப்பல்கள் பயன்பாட்டிற்கு வரும்போது பல்வேறுபட்ட துறைகளில் இடம்பிடித்து மனிதனுக்கு பல்வேறு வகைளில் நன்மையளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment