ykannan: June 2010

Friday, June 18, 2010

பெண்களே உஷார் III

பெண்களுக்கு எவ்வாறெல்லாம் தொல்லை கொடுக்கலாம் என்று நம்ம ஆட்கள்கிட்டதாங்க கத்துக்கணும் . உங்களுக்கு தெரியாமயே உங்கள் போட்டோ இணையதளங்களில் வலம் வரலாம். பல்வேறு கீழ்தரமான தளங்களில் இடம்பெறலாம். எப்படின்னு கேக்கறீங்களா? தொடர்ந்து படிங்க ..



இன்னிக்கு பெண்களுக்கு எதிரான முக்கிய ஆயுதமே கேமரா செல்போன்தான். இன்னிக்கு நெறைய பேர் இந்தமாதிரி போன்தான் உபயோகிக்கறாங்க. அதில சில பேர்தாங்க இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யறாங்க. இன்னிக்கு நாகரீகம்னு சொல்லிக்கிட்டு மேல்நாட்டு உடைகளை போடறீங்க.(குறிப்பா கல்லூரி மாணவிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர்) கேட்டா வசதியா இருக்கு இந்த கோடைகாலத்தில அப்படின்னு. ஆனா பாருங்க உங்களுக்கு வசதியா இருக்கற விசயமே உங்களுக்கு ஆபத்தாக முடியும். உடலை மறைக்கற மாதிரி உடை என்றால் பிரச்சனை இல்லை. பல உடைகள் அப்படியா இருக்கு?

இந்த மாதிரி உடை அணிந்து நீங்கள் பொது இடங்களுக்கு செல்லும்பொழுது உங்களுக்கே தெரியாமல் சில விஷமிகளின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு நீங்கள் பலி ஆகிறீர்கள். நீங்கள் படிக்கும் கல்லூரியோ அல்லது பொருட்கள் வாங்க செல்லும் ஸ்பென்சர், சிட்டி சென்ட்டர் அல்லது கடற்கரை போன்ற இடத்திலையோ நீங்கள் புகைப்படம் எடுக்கப்படலாம். பின்பு அது பலரிடம் கைமாறும் இணையதளத்திலும் போடப்படலாம். .

நீங்கள் கல்யாணமாகாத இளம்பெண்ணாக இருந்து உங்கள் படம் இவ்வாறு தளங்களில் வந்தால் உங்கள் வாழ்க்கை ? . அதேபோல்தான் திருமணம் ஆனவர்களுக்கும். தேவையற்ற பல சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும்.வெளில போறப்ப நாம எப்படி உடை அணிகிறோம் என்பது முக்கியம். பார்ப்பதற்கு நன்றாக இருந்தால் மட்டும் போதாது , உடலை மறைப்பதாகவும் இருக்கணும் எனவே முடிந்த வரை வெளியில் செல்லும்பொழுது நமது உடையில் கவனம் செலுத்துவோம்.

அன்புடன்

கண்ணன்

சண்டையிடும் பெற்றோரா நீங்கள் ?



நிமிடத்துக்கு நூறு SMS கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பின் பாம்பும் கீரியுமாகிவிடுகிறார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாய் நடக்கும் இவர்களின் திருமண வாழ்க்கை கனவுகளின் பல்லக்கில் சில மாதங்கள் ஓடும். அவ்வளவு தான். திடீரென ஒரு நாள் யூ டர்ன் அடித்துத் திரும்பும் வண்டி போல திசை மாறி நிற்கும். “மேட் பார் ஈச் அதர்” போல அசத்தலாய் சில மாதம் ஓடிய வாழ்க்கை எப்படி சட்டென உடைந்து வீழ்கிறது ?

எவரஸ்டின் உச்சியில் கட்டி வைக்கும் எதிர்பார்ப்புக் கூடு கலைவது தான் பெரும்பாலான சிக்கல்களின் துவக்கம். காதல் காலத்தில் அடித்துத் தள்ளும் எஸ்.எம்.எஸ் களும், வாங்கிக் குவிக்கும் பரிசுகளும், சிரிப்புகளும், சீண்டலும் திருமணத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய்க் காய்ந்து போகிறது. அது தான் பெரும்பாலான பிரச்சினைகளின் ஊற்றுக் கண். தான் வேண்டா விருந்தாளியாகி விட்டோமோ எனும் பதட்டம் தம்பதியரிடையே எழுகிறது. அந்த நினைப்பே எரிச்சல், கோபம், மன அழுத்தம் என உருமாறி உருமாறி ஆளை விடுங்க சாமி எனும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.

திருமணத்தின் முதல் ஏழு வருடங்களைச் சந்தோஷமாகக் கடப்பதில் இருக்கிறது குடும்ப வாழ்வின் அஸ்திவாரம். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு வருடங்களைக் கடப்பது பலருக்கு சிம்ம சொப்பனம் ! திருமணத்தின் முதல் ஏழு வருட காலத்தை ஆங்கிலத்தில் செவன் இயர் இட்ச் (Seven year itch) என அழைக்கிறார்கள். இல்லாத பிரச்சினைகளெல்லாம் இந்த ஏழு வருட காலத்தில் வரும். டைவர்ஸ் புள்ளி விவரங்கள் இந்த காலகட்டத்தில் தான் எகிறும். இந்த ஏழு வருடப் புயலை சாதுர்யமாகவும், அன்புடனும் கடந்தால் காத்திருக்கிறது அமைதியான வாழ்க்கை.

இதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தார் அமெரிக்காவின் பேராசிரியர் ட்டெட் ஹட்சன் ( Ted Huston ) என்பவர். இவர் மனித உறவுகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியவர். ஏன் மக்கள் திருமணம் முடிந்த கையோடு டைவர்ஸும் கேட்கிறார்கள் என்பது தான் அவரை அலட்டிய கேள்வி. அவர் கண்டு பிடித்த பதில்கள் சுவாரஸ்யமானவை. அவருடைய பட்டியலில் டைவர்ஸ் வாங்குபவர்கள் யார் தெரியுமா ? திருமணம் முடிந்த துவக்கத்தில் உல்லாசமாய் சினிமா காதலர்கள் போல சுற்றுபவர்கள். “தான் தான் எல்லாம்” என நினைப்பவர்கள். விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர்கள். இவர்கள் தான். டைவர்சின் முக்கியமான காரணம் உண்மையான ஆழமான அன்பு இல்லாதது தான். கருத்து வேற்றுமைகள், பதவி பணம், இத்யாதி சங்கதிகள் எல்லாம் கிடையாது என்கிறார் இவர்.

திருமணமாகி முதலிலேயே குழந்தையையும் பெற்றுக் கொள்பவர்களுக்கு விஷயம் இடியாப்பச் சிக்கலாகிவிடுகிறது. குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே கூரைக்குள் எலியும், பூனையுமாய் வாழ வேண்டும். அல்லது எண்ணையும், நெருப்புமாக பற்றிக் கொண்டே திரியவேண்டும். இந்த சண்டையில் அதிகம் காயப்படுவது அப்பாவா, அம்மாவா என பட்டிமன்றம் நடத்தினால், முடிவு குழந்தைகள் என்று தான் வரும்.

“அது பச்சைக் குழந்தை தானே” என்றோ, அல்லது அது வளர்ந்த குழந்தை புரிந்து கொள்ளும் என்றோ பெற்றோர் தப்புக் கணக்கு போடுகிறார்கள். உண்மையில் சின்னக் குழந்தையானாலும் சரி, கல்லூரிக்குச் செல்லும் குழந்தையானாலும் சரி. பாதிப்புகள் நிச்சயம் உண்டு. குழந்தைகள் பெற்றோரின் பிரதிபலிப்புகள். பெற்றோரின் சொல்லும், செயலும் தான் குழந்தைகளைக் கட்டியெழுப்புகின்றன. வீட்டில் சதா சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் ? சண்டையிடலாம் தப்பில்லை என்பதையா ? அல்லது குடும்பம் என்றால் சண்டை போட்டுத் தான் வாழவேண்டும் என்பதையா ? எதுவானாலும் அது சரியான வழிமுறையல்ல என்பது தானே உண்மை.

பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் பயப்படுகின்றன. அவர்களுடைய ஆழ் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுகிறது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன. ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் சண்டையில் பெற்றோரின் கோபம் குழந்தைகளின் மீது திரும்பி விட்டால் போச்சு. குழந்தைகள் கதிகலங்கி விடுகின்றன.

குழந்தைகள் இதனால் பல தவறான பாடங்களைக் கற்கிறது. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க அம்மாவைத் திட்டினால் போதும் என நினைக்கிறது. இதனால் அப்பாவைப் பற்றி அம்மாவிடமும், அம்மாவைப் பற்றி அப்பாவிடமும் கதைகள் ஒப்பிக்கிறது. அவர்களுடைய நோக்கம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை மூட்டுவதல்ல. பெற்றோரின் அரவணைப்பு மட்டுமே. அது சாதாரணமாய் கிடைக்காத போது ஏதேதோ செய்து அதை அடைய முயல்கின்றன.

பெற்றோரின் சண்டையில் குழந்தைகளை இழுக்கவே கூடாது. பல பெற்றோர் தங்கள் குடுமிப் பிடி சண்டையில் குழந்தையை நடுவராக்க முயல்வார்கள். இது குழந்தைகளின் மன அழுத்தத்தை ரொம்பவே அதிகரிக்கும். பெற்றோரிடம் பாகுபாடு காட்டாத சூழலை குழந்தைகளுக்குத் தர வேண்டும். அதை விடுத்து குழந்தைகளையே இக்கட்டான சூழலில் தள்ளி விடக் கூடாது.


பெற்றோரின் சண்டை குழந்தைகளை உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் என்கிறார் டாக்டர். மார்க் கம்மிங்ஸ். இவர் உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இந்தியானாவிலுள்ள நவ்டர் டீம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்திருக்கிறார். இவருடைய ஆய்வு முடிவு சிந்திக்க வைக்கிறது. பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடோ, விவாதங்களோ வருவது குழந்தையின் மனதை பாதிப்பதில்லை. ஆனால் அந்த விவாதங்கள் முற்றுப் பெறாமல் போவது தான் குழந்தைகளை பாதிக்கிறது. தீர்வற்ற சண்டைகள் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன என்கிறார் அவர்.

மனம் சார்ந்த சிக்கல்களைத் தொடர்ந்து, தலைவலி, வயிற்று வலி என உடல் சார்ந்த நோய்களும் குழந்தைகளை வந்தடைகின்றன. அப்போதும் சில பெற்றோர் சும்மா இருப்பதில்லை. “குழந்தையை ஒழுக்கா கவனிக்காம உனக்கென்ன பெரிய வேலை” என அப்பா கத்துவார். “குழந்தையை பெக்கறது தான் அம்மா வேலை, வளக்கிறது அப்பா வேலை” என அம்மா கத்துவார். முடிவில் அங்கும் ஒரு பெரிய சண்டையே மல்லுக் கட்டும்.

சில குடும்பங்களில் “நான் தான் செய்வேன்” எனும் சண்டை பாதி நேரம் ஓடும். “நீ செய்ய வேண்டியது தானே” எனும் சண்டை மீதி நேரம் ஓடும். நாம் செய்வோம் என ஒன்று படாததால் குழந்தையின் சிந்தனையும் இரண்டாய் உடைந்து தொங்கும். எனவே தம்பதியரின் அன்யோன்யம் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரம் என்கிறார் கனடாவின் குழந்தைகள் நல நிபுணர் கேரி டைரன்பில் ( Gary Direnfeld).

தங்கள் சண்டையில் சிதைந்து போவது தனது செல்லக் குழந்தை எனும் உண்மையை பெற்றோர் உணர வேண்டும். “தான் செய்வதெல்லாம் சரி” யென நிறுவுவதும், அடுத்தவரை தரக்குறைவாய் பேசுவதும், அவமானப்படுத்துவதும், அடிப்பதும் கடைசியில் குழந்தையைத்தான் பாதிக்கிறது.

ஒருவேளை திருமணங்கள் டைவர்ஸில் முடிந்து விட்டால் சொல்லவே வேண்டாம். குழந்தை நொறுங்கி விடுகிறது. பெற்றோர் குழந்தையை வளர்க்க பொருளாதாரம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். குழந்தையின் ஏக்கமும் தவிப்பும் அவர்களுக்கு பல நேரங்களில் தெரிவதே இல்லை.

கருத்து வேறுபாடுகள் இல்லாமல் குடும்ப வாழ்க்கை இருக்கப் போவதில்லை. ஆனால் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றியும் தோல்வியும். சண்டையே போடாமல் இருக்க முடியாது. அதுவும் ஆபத்தானதே. அடக்கி வைக்கப்படும் கோபம் நோய்களாகத் தலை நீட்டும். ஆனால் சண்டையைத் திறமையாகக் கையாளவேண்டும்.


கருத்து வேறுபாடு வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பதாய் இருக்க வேண்டும் உங்கள் நடவடிக்கை ! முடிவில்லாமல் ஒரு சண்டை இருக்கவே கூடாது. விவாதித்து, பேசி, கடைசியில் உடன்பாடாகி சந்தோசமாய் ஒரு விவாதம் முடிவுக்கு வரவேண்டும். அது உண்மையில் குழந்தைக்கு வழிகாட்டும் என்கிறார் உளவியலார் பிராட் சாச் (Brad Sachs). இந்த உண்மையைத் தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்வில் சிக்கலே இல்லை.

அன்புடன்

கண்ணன்

மூளையில் கேன்சர் வருமா?


மொபைல் போன் பயன்படுத்தினால், மூளையில் கேன்சர் வருமா? இந்த கேள்வி இன்னும் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பொருளாகவே இருந்து வருகிறது.
Food and Drug Administration மற்றும் CTIAThe Wireless Association போன்ற அமைப்புகள் புற்று நோய் உருவாக்கும் அளவிற்கு, மொபைல் போனிலிருந்து கதிர்வீச்சு இருப்பதில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால் Environmental Working Group (EWG) மற்றும் World Health Organization (WHO) ஆகிய அமைப்புகள் பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன்களைப் பயன்படுத்தினால், மூளை மற்றும் எச்சில் சுரப்பியில் புற்றுநோய்க்கான கட்டிகள் வர வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளன.

மேலும் ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன. குறிப்பாக வளரும் பருவத்தில் உள்ள மூளை உடைய சிறுவர்களிடம் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன. இன்னும் இரண்டு அமைப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.

எது எப்படி இருந்தாலும், இத்தகைய சூழ்நிலையில் நாம் எப்படி இயங்க வேண்டும். மொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்ட நிலையில், எந்த அளவிற்கு அதன் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாமே!

1. குறைவான கதிர்வீச்சு உள்ள போன்: மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific Absorption Rate) என்று ஒரு அளவைக் கூறுகின்றனர். மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன.

இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும்.

உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.

EWG.org என்ற தளத்தில், மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டேட்டா பேஸ் உள்ளது. அங்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின் அபாயத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் சாம்சங் நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான கதிர்வீச்சு உடையது.

மோட்டாரோலாவின் மோட்டோ வியூ 204 மற்றும் டி–மொபைல் மை டச் 3ஜி ஆகியவை அதிக கதிர் வீச்சு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான மொபைல் போன்களில் மோட்டாரோலா ட்ராய்ட், பிளாக்பெரி போல்ட் 9700, எச்.டி.சி. மேஜிக் மற்றும் எல்.ஜி.சாக்லேட் டச் ஆகியவை அதிகமான கதிர்வீச்சு உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டு போன்களில் மிகவும் குறைவாக கதிர்வீச்சு உள்ளவையாக மோட்டாரோலா ப்ரூட் ஐ680, சாம்சங் மிதிக், பான்டெக்ஸ் இம்பேக்ட் (Motorola Brute i680, Samsung Mythic, and Pantech Impact) அறிவிக்கப்பட்டுள்ளன. (இவற்றில் சில இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வராமல் இருக்கலாம்) எனவே நீங்கள் வாங்கும் போன் குறைவான கதிர்வீச்சு உள்ளதாக வாங்குவது நலம்.

2. ஹெட்செட் / ஸ்பீக்கர்: போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

3. அதிகம் கேள், குறைவாகப் பேசு: போனில் நாம் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது.

4. பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சினைக் காட்டிலும், டெக்ஸ்ட் அனுப்புகையில் குறைவான வீச்சே இருக்கும். எனவே அதிகம் டெக்ஸ்ட் பயன்படுத்தவும்.

5. சிக்னல் வீக்? மூடிவிடு: உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும்.

6. சிறுவர்களே கவனம்: சிறுவர்களின் உடல் மற்றும் மூளை பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்து வதிலிருந்து தடுக்கவும்.

7. மூடிகளா? வேண்டாம்: மொபைல் ஆன்டென்னா மூடி, கீ பேட் மூடி போன்றவை போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவே இந்த வகை மூடிகளைப் பயன்படுத்துவதனைத் தடுக்கவும்.

அறிவியல் சாதனங்கள் நம் வாழ்வில் வளம் சேர்த்தாலும், இது போல ஆபத்துக்களையும் தாங்கியே வருகின்றன. நாம் தான் இத்தகைய இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

அன்புடன்

கண்ணன்

வெளியூருக்கு படிக்கபோகும் மாணவிகளுக்கு சில யோசனைகள்....

தோழிகளே, புதிதாக கல்லூரியில் சேரப்போகும் உங்களுக்கு நீங்கள்
நினைத்த வண்ணம் வெற்றி அடைய முதலில் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள். நம்முடைய வாழ்கையில் பள்ளி கல்வி முடிந்து
கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் அந்த தருணம் மிக முக்கியமானது.
இது நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான ஒரு திருப்பு முனை. இதை நாம் நல்ல முறையில் எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டாமா?? உங்கள் கல்லூரி வாழ்கை சிறப்படைய ஒரு சர்வகலாசாலையில் பேராசிரியராக பணி புரியும் நான் என்னுடைய அனுபவங்களை வைத்து
சில ஆலோசனைகளும் குறிப்புகளும் தரலாம் என்று நினைக்கிறேன்.
இந்த ஆலோசனைகள் மகளை கல்லூரியில் சேர்க்கப்போகும் தாய்மார்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கல்லூரியில் சேர்ந்து பெற்றோர்களுக்கு பிரியா விடை கொடுத்த பிறகு தான் தெரியும் வீட்டு நினைவால் ஏற்படும் துயரம் (ஹோம் ஸிக்னஸ் ) எவ்வளவு பாதிக்கும் என்று. இவை மட்டும் அல்லாமல் இதுவரை நமக்கு புரியாத / வந்திராத சில புதிய பிரச்சினைகளையும் தனியாக எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த பிரச்சினைகள் என்னென்ன அவற்றை எங்கனம் எதிர்கொள்ள வேண்டும் என்று கல்லூரியில் சேரும் முன்பே நாம் தெரிந்து கொண்டால் கல்லூரி வாழ்கை சுகமாகவும், சந்தோஷமாகவும் வெற்றியுடனும் முடியும்.

ஹோம் ஸிக்னஸ்

தாய் தந்தையரின் அரவணைப்பில் இத்தனை நாள் வளர்ந்து விட்டு திடீரென அவர்களை விட்டுப்பிரியும் போது ஏற்படும் பிரிவுத்துயரமே இது. ஆண்களை விட பெண்களையே இது அதிகமாக தாக்குகிறது. பெற்றோர்களை தற்காலிகமாக பிரிந்தாலும் நம் உள்மனது அதை ஏற்க மறுக்கும். நாம் எதற்காக இந்த கல்லூரியில் சேர்ந்தோம் என்பதே சில சமயம் மறந்து விடும். படிப்பை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விடலாம் என்று கூட தோன்றும். இப்படி பட்ட சூழ்நிலையில் உங்களுக்கு படிப்பின் மேல் உள்ள ஆர்வம் குறையும் இந்த நிலை புதிய நட்பு கிடைக்கும் வரையே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

புது நட்பு

நீங்கள் புதிய சூழ்நிலைக்கு ஒத்துப்போகும் வரை, உங்களை எப்பொழுதும் எதாவது வேலைகளில் ஈடுபடுத்தி கொள்ளவேண்டும். தனிமையை தவிர்த்துக்கொள்ளுங்கள். தனிமை நமக்கு கிடைக்கும் போது, நாம் என்னென்ன இழந்தோம் என்று மனது அசை போடத்தொடங்கும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபாடு வரும். அதனால் உங்கள் படிப்பு மற்றும் அன்றைய வேலை முடிந்து விட்டால் உங்கள் விடுதி அறையில் தனித்திருக்காது நூல் நிலையத்திற்கு செல்லுங்கள் அல்லது பொது அறைகளில் தொலைக்காட்சி, விளையாட்டு மற்றும் செய்திதாள்களில் ஈடுபடுத்திகொள்ளுங்கள். அங்கு இருக்கும் மற்ற மாணவர்களிடம் பேச்சு கொடுங்கள். இது உங்களின் உரையாடல் திறமையை வளர்க்கும். ஏற்கனவே அங்கு தங்கி இருப்பவர்களிடம் இதன் மூலம் பரிச்சயம் கிடைக்கும். எவரையும் உடனடியாக நல்லவர் என்றோ தீயவர் என்றோ தீர்மானிக்க வேண்டாம். சில நாட்கள் கூட கழியட்டுமே.......

அன்புக்கு ஏக்கம் / காதல்

இருபாலாரும் படிக்கும் கல்லூரியானால் சகஜமாக பழகும் ஆண்கள் கூட அன்பு செலுத்துவதாக நினைத்து அவர்கள் மேல் ஈடுபாடு வரும். அவர் நல்லவரா கெட்டவரா என்று சிந்திக்க தவறி விடுவீர்கள். தீய நட்டபின் கைகளில் விழ வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய நட்பு உங்கள் வாழ்கையின் குறிக்கோளை தகர்த்து விடும். அதனால் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். கல்லூரி படிப்பு முடியும் வரை காதல் வேண்டாமே.. காதலித்து விட்டீர்களா?? பொறுமையாக இருங்கள். நீங்கள் கற்க வந்த கல்விக்கு முதலிடம் கொடுங்கள். மிகுந்த பெண்களின் கல்வி இந்த காதலினால் பாதிக்க படுகிறது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு காதலே உலகம் என்று தனம்பிக்கையை இழந்து விடக்கூடாது. காதல் மற்றும் திருமணம் வெற்றியடையாத போது நீங்கள் கற்ற கல்வி தான் கைகொடுக்கும். கவனமாக இல்லையென்றால் வேறு அவமானங்களும் வந்து சேரும். சில பெண்கள் வெளியில்சொல்ல முடியாமல் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள். இது பல கல்லூரிகளில் நடக்கிறது. இந்தவிஷயம் எப்பொழுதும் உங்கள் மனதில் இருக்க வேண்டும்.

தன் கையே தனக்கு உதவி

பிறர் உதவி இன்றி, நம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தெரிந்து கொள்ளுங்கள். பல வீடுகளில், பெண்களை பொத்தி பொத்தி வளர்த்திருப்பார்கள் பெற்றோர்கள். வங்கிக்கணக்கு துவங்குவது, அவசியமான பொருட்கள் வாங்க கடைகளின் விவரம், அவசியமுள்ள பஸ் ரூட்டுகள், அருகில் சொந்தக்காரர்கள் இருந்தால் அவர்களுடைய விலாசம், தொலைபேசி எண், நகல் எடுக்கும் நிலையங்கள்.. என்று இவற்றை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொன்றிற்கும் நாம் மற்றவரை சார்ந்திருந்தால் நேர விரயம் மட்டுமல்லாமல் சில சமயம் நட்பும் முறிந்து விடும்.

ஆண் சிநேகம்

கல்லூரி வாழ்வில், பல ஆண்களை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்கள் உங்கள் ஆசிரியராகவோ, சக மாணவனாகவோ, உங்கள் சகோதரர்களின் நண்பர்களாகவோ, உங்கள் தோழிகளின் சகோதரர்களாகவோ, உங்கள் டிபார்ட்மெண்டில் வேலை செய்பவராகவோ, பஸ்ஸில் தினமும் உங்களுடன் கூட பிரயாணம் செய்பவராகவோ வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண்களோடு பழகும் போது கவனமாக இருங்கள். இவர்களோடு பழகும் போது உங்கள் உள்ளுணர்வு சொல்லவதை கேளுங்கள். பெண்களுக்கு அவர்கள் உள்ளுணர்வு ஒரு நல்ல வழி காட்டி.உதவி கேட்க தயங்காதீர்கள்.

தன்னம்பிக்கை

யோகா மற்றும் உடற்பயிற்சி தினமும் செய்து வந்தால் உங்கள் மனதின் எண்ண சிதறல்களை ஒருமுகபடுத்தலாம். ஆரோக்யமாகவும் இருக்கலாம். பரிட்ச்சை நேரங்களில் உங்களின் உற்சசாகமின்மையை குறைத்து தன்னபிக்கையை உயர்த்தும். நீங்கள் கலூரியில் எதற்கு சேர்ந்தீர்கள் என்ற குறிக்கோளை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் வாங்கும் மார்குகள் மட்டும் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போவதில்லை. உங்களை எப்பொழுதும் மற்றவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அது உங்களை நீங்களே அவமதிப்பதாக அர்த்தம். வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் இருந்தால் அது உதவாது. உங்களுக்குள் இருக்கும் மற்ற திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். உங்களுடன் படிப்பவர் வசதி உள்ளவராக இருக்கலாம், மிகுந்த அழகுள்ளவராக இருக்கலாம், விலையுயர்ந்த ஆடைகள் உடுத்தலாம், அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கலாம். அழகும், வசதியும், ஆடைகளும் ஒருவரின் வாழ்கையை ஒரு போதும் நிர்ணயிக்கப்போவதில்லை. உள்ளத்தின் அழகே உண்மையான அழகு. ஆகையால் நல்ல குணமுள்ளவராக நடந்து கொள்ளுங்கள். இயல்பாகவே உங்களை மற்றவர்களுக்கு பிடிக்கும்.

வெற்றி உங்கள் கையில்

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் வைத்திருக்கும் தொடர்பு. உங்கள் வசதியை பொறுத்து அவர்களுடன் தினமும் ஒரு முறையோ அல்லது வாரம் ஒருமுறையோ தொடர்பு கொண்டு உங்கள் கல்லூரியில் நடக்கும் விஷயங்களையும்,உங்கள் பிரச்சனைகளையும் தெருவித்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று கொள்ளுங்கள் அவர்களின் அன்பும் அரவணைப்பும் உங்களை வழிநடத்தி கல்லூரி வாழ்கையை வெற்றி பெற வைக்கும். உங்களின் கவனத்தை சிதற வைக்கும் காரணங்களை தெளிவாக புரிந்து கொண்டால், அதற்கு ஏற்ற தீர்வு காணும் வழி முறைகளை கண்டு, வெற்றி பெறலாம். கல்லூரி வாழ்க்கையை இனிமையாக மாற்றி கொள்ளலாம்.

அன்புடன்

கண்ணன்