ykannan: கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் வைரஸ்கள்

Saturday, October 2, 2010

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் வைரஸ்கள்



கணினியினை பயன்படுத்துவதை விட, அதைப் பாதுகாத்து வைப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. எப்படி தான், மனைவியைக் கூட புறம் தள்ளிவிட்டு இந்த கணினிகளுக்கு அடிமையாகிறார்களோ தெரியவில்லை. "உமக்கு என்னய்யா அக்கறை? அதிலெல்லாம தலையிடாதே!!" என்று அதட்டுவது எனக்கு கேட்டுவிட்டதால் நேராக விசயத்திற்கே வந்திவிடுவோம்.

"நேற்று மாலையில் கூட நன்றாகத் தான் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று காலையில் இருந்து பூட் ஆக மறுக்கிறது" என்ற துக்கசெய்தி சொல்லி நிறையக் கேட்டிருப்போம். உலகிலேயே அதிகமாக வைரஸால் பாதிக்கப்படும் இயங்குத்தளம் நமது விண்டோஸ் இயங்குதளம் என்றுத் தெரிந்தும் அதையே தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். கணினிகளைத் தாங்கும் வைரஸ்கள் பல உள்ளன. அவை பற்றி சிறிது அலசிப்பார்ப்போம்.

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?

1. Boot Sector Viruses:

அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.

2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:

இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.

3. Stealthy Virus:

இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.

4. MultiPartite:

இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.

5. Polymorphic:

பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.

6. Macro

மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.

அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment